இங்கிலாந்து வெற்றி: ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது!

1,067




சாம்பியன்ஸ் டிராபியில் குரூப்-ஏ பிரிவில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பிர்மிங்காம் நகர எட்க்பாஸ்டன் ஸ்டேடியத்தில் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பௌலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தனது வாழ்வா? சாவா? போட்டியில், ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக வார்னரும், ஆரோன் ஃபின்ச்சும் களமிறங்கினர்.

ஒருபுறம் வார்னர் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், மறுபுறத்தில் அதிரடியாக ஆடிய ஃபின்ச் 68 ரன்களைக் குவித்தார். அடுத்து களமிறங்கிய ஸ்மித் 56 ரன்களைக் குவித்தார். கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடிய டிரவிஸ் ஹெட் ஆட்டமிழக்காமல் 71 ரன்களைக் குவித்தார். இறுதியில் ஆஸ்திரேலியா, 50 ஓவர்களின் முடிவில், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ரன்களைக் குவித்தது.

இதைத்தொடர்ந்து, 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஆஸி., பௌலர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். இதனால் ஜோ ரூட், ஜேசன் ராய் உட்பட நான்கு டாப் ஆர்டர் பிளேயர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால், ஆஸ்திரேலிய அணி சற்று ரிலாக்ஸான நேரத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கைகோத்தனர். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்டு, சீரான வேகத்தில் ரன்களை அடித்தனர்.

எனவே மோர்கன் 87, ஸ்டோக்ஸ் 102 ரன்கள் எடுத்தனர். இதனிடையே இங்கிலாந்து அணி, 40.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்புக்கு 240 ரன்களை எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றி மூலம், குருப் ஏ-வில் பங்களாதேஷ் அணியும் அரையிறுதிச் சுற்று போட்டிக்கு முன்னேறியுள்ளது; ஆஸ்திரேலிய அணி தொடரை விட்டு வெளியேறியது!

Comments
Loading...