
பங்களாதேஷ் அணியை வீட்டுக்கு அனுப்பியது இந்தியா! CL2017
சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிப் போட்டியில் இந்தியா, பங்களாதேஷ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பங்களாதேஷ் அணி நிதானமாக ஆடியது. தொடக்கத்தில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும், அந்த அணி தொடர்ந்து ரன் குவிப்பில் ஈடுபட்டது. குறிப்பாக, தமீம் இக்பால், ரஹீம் ஆகியோரின் பார்ட்னர்ஷிப் அந்த அணிக்குக் கைக்கொடுத்தது. இதனால், 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு அந்த அணி 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் இக்பால் 70, ரஹீம் 61 ரன்கள் எடுத்தனர்.
இந்திய அணித்தரப்பில் புவனேஷ்வர் குமார், பூம்ரா, கேதர் ஜாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து, 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ஆரம்பம் முதலே ரன் குவிப்பில் ஈடுபட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் தவான், ரோஹித் அதிரடி காட்டினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் குவித்தது. தவான் 46 ரன்களில் அவுட் ஆனார். இதையடுத்து, கோலியும், ரோஹித் சர்மாவும் பங்களாதேஷ் பௌலர்கள் வீசிய பந்துகளைத் தெறிக்க விட்டனர். இதனால், இந்திய அணியின் கையே ஓங்கியது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா சதமடித்தார். அதேபோல், மறு முனையில் சிறப்பாக ஆடிய கோலி, உலகில் வேகமாக 8,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 40.1 ஓவர்களிலேயே ஒரு விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 123, கோலி 96 ரன்கள் எடுத்தனர். ரோஹித் – கோலி ஜோடி 178 ரன்கள் பார்ட்னர்ஷிப் குவித்தது. இந்த வெற்றி மூலம், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.