புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்க முக்கியமான ஐந்து காரணங்கள் இவைதான்.




ஐபிஎல் பைனலில் நேற்று டாஸ் வென்று முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதுவே வெற்றிக்கு போதுமானதாக இருந்தது.

புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன.

இந்த நிலையில் புனே அணி சிறப்பாக பந்து வீசியது. ஆனால் பேட்டிங்கில் சொதப்பிய புனே 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

புனே அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்க முக்கியமான ஐந்து காரணங்கள் இவைதான்.

 

பென் ஸ்டோக்ஸ் ஆப்சென்ட்

இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்சை முக்கிய கட்டத்தில் இழந்துவிட்டது புனே அணி. அவர் தனது சொந்த நாட்டு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றுவிட்டார். குவாலிபையர்-1 சுற்றிலும் ஸ்டோக்ஸ் இல்லாமல்தான் ஆடியது புனே. அப்போது வெற்றிபெற்றது. க்ருணால் பாண்ட்யா பேட் செய்தபோது, நல்ல ஒரு பவுலர் பந்து வீச கிடைக்காமல் புனே திணறியது. பென் ஸ்டோக்ஸ் இருந்திருந்தால் பவுலிங்கில் பிரச்சினை இருந்திருக்காது. அதேபோல புனே பேட் செய்தபோது, வேகமாக ரன் சேர்க்க முடியவில்லை. காரணம் பவர் ஹிட்டர்கள் இல்லை. டோணியைத்தான் பவர் ஹிட்டராக புனே அணி நம்பியிருந்தது. பென் ஸ்டோக்ஸ் இத்தொடரில் சதம் அடித்து ஃபார்மில் இருந்தவர் என்பதால் எளிதாக ரன் ரேட்டை கூட்டியிருப்பார்.

 

ஆல்ரவுண்டர் ஆட்டம்

க்ருணால் பாண்டியாவின் ஆல்ரவுண்டர் ஆட்டம். 38 பந்துகளில் 47 ரன்களை விளாசி அணி கவுரவமான ஸ்கோர் எடுக்க உதவினார் பாண்ட்யா. அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியபோது இவரது ஆட்டம்தான் மும்பைக்கு கை கொடுத்தது. புனே பேட் செய்ய வந்தபோது முதல் ஓவரையே இவர்தான் வீசினார். 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள்தான் கொடுத்தார்

 

ஓப்பனிங்

புனே பேட்டிங்கின் ஆரம்பத்தில் அதிரடி காட்டவில்லை. சிறு ரன்களை துரத்தும்போது மெதுவாக ஆரம்பிக்க கூடாது என்பதே கிரிக்கெட் விதி. ரஹானேவும், திரிபாதியும் மெல்லவே ரன்ரேட்டை கொண்டு சென்றனர். 3வது ஓவரில் பும்ரா, திரிபாதியை அவுட் செய்ததும் ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனை. ரஹானே சிங்கிள்கள், இரட்டைகளாக ஓடி ரன் எடுத்தார். எதிர்முனையில் ரிஸ்க் எடுத்து ஆட ஆளில்லாத நிலையில்தான் பவர் பிளே ஓவர்களை கடந்தது புனே.

 

டோணி ஆட்டம்

டோணியை, வழக்கத்திற்கு மாறாக திவாரிக்கு முன்பே களமிறக்கி கேப்டன் ஸ்மித் தவறு செய்துவிட்டார். டோணி முதல் சில பந்துகளை சந்தித்த பிறகே அதிரடி காட்ட ஆரம்பிப்பது வழக்கம். ஆனால் டோணி களமிறங்கும்போதே பந்துகளைவிட ரன் அதிகம் சேகரிக்க வேண்டிய நிலை இருந்தது. எனவே, நல்ல ஸ்டிரைக் ரேட் வைத்துள்ள திவாரியை அப்போது களமிறக்கியிருக்கலாம். அவர் நான்கு நல்ல ஷாட்டுகளை அடிதத்துவிட்டு அவுட்டாகியிருந்தால் கூட ரன் ரேட் அழுத்தமின்றி, அடுத்து டோணி எளிதாக ஆடியிருக்க முடியும். 18வது ஓவரில் டோணி அவுட்டானபோது 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

 

தேவையில்லாத ஷாட்

5வது முக்கிய காரணம், கடைசி ஓவரில் மனோஜ் திவாரியும், ஸ்டீவன் ஸ்மித்தும் அவுட்டானதுதான். 11 ரன்கள் மட்டுமே கடைசி ஓவரில் தேவைப்பட்ட நிலையில் முதல் பந்தில் பவுண்டரி கிடைத்தபோதிலும், அடுத்தடுத்த பந்துகளில் திவாரியும், ஸ்மித்தும் கேட்ச் கொடுத்து அவுட்டாகினர். திவாரி ரிஸ்க் இல்லாத ஷாட்டுகளை ஆடியிருந்தாலே வெற்றி வசப்பட்டிருக்கும்.