இந்தியாவை ஜெயிப்பது மட்டும் எங்கள் முக்கிய இலக்கு அல்ல, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதே இப்போதைய திட்டம் – பாகிஸ்தான்




“இந்தியாவை ஜெயிப்பது மட்டும் எங்கள் முக்கிய இலக்கு அல்ல, சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதே இப்போதைய திட்டம். நாங்கள் தகுதியான அணி. நிச்சயம் வென்று சரித்திரம் படைப்போம் ” – எனச் சொன்னவர் இன்ஸமாம் உல் ஹக். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, இந்நாள் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இமாத் வாசிம், சர்பராஸ் அகமது உள்ளிட்ட வீரர்களும் `இந்தியாவை வெல்வோம்’ எனச் சூளுரைத்துள்ளார்கள். உலகக்கோப்பையையும் டி20 கோப்பையையும் ஏற்கெனவே வென்றுவிட்ட பாகிஸ்தான், இதுவரை சாம்பியன்ஸ் டிராபியை வென்றதில்லை. இந்த முறை இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுமா? பாகிஸ்தான் ரசிகர்கள், பல ஆண்டுகளுக்குப் பிறகு பட்டாசைக் கொளுத்துவார்களா?

உலகக்கோப்பையில் இந்தியாவை, பாகிஸ்தான் வென்றதே கிடையாது என்பது வரலாறு. ஆனால், மினி உலகக்கோப்பையில் இதுவரை சந்தித்த மூன்று போட்டிகளில் இரண்டில் ஜெயித்தது பாகிஸ்தான். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை பாகிஸ்தான் கடந்து வந்த பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்.

1998 ஆம் ஆண்டு, கால் இறுதிப்போட்டி:

முதல் உலகக்கோப்பையில் கால் இறுதிச்சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்றது பாகிஸ்தான். அந்தத் தொடரின் நான்காவது கால் இறுதிப்போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தொடக்க வீரர் வாலேஸ், சேவாக் பாணியில் அன்றைய தினம் அதிரடி ஆட்டம் ஆடினார். 58 பந்துகளில் 13 பெளண்டரிகள் அடித்து 79 ரன்கள் குவித்தார். சந்திரபால், 49-வது ரன்னில் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 289 ரன்களைக் குவித்தது வெஸ்ட் இண்டீஸ். அதில் 32 ரன்கள், பாக். வீரர்கள் தாராளமாகத் தந்த உதிரி ரன்கள்.

`நீங்க மட்டும்தான் கொடுப்பீர்களா… நாங்களும் அள்ளித்தருவோம்’ல என 25 ரன்களை பாகிஸ்தான் பேட்டிங்கின்போது தாரைவார்த்தது லாராவின் பெளலிங் படை. ஒரு வீரர்கூட நிலைத்துநின்று ஆடாததால், அந்தப் போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 259 ரன்களை மட்டுமே சேர்த்தது பாகிஸ்தான். 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

2000 ஆம் ஆண்டு, அரை இறுதிப்போட்டி:

1999 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மண்ணைக் கவ்வியது பாகிஸ்தான். அந்தக் காலகட்டங்களில் பாகிஸ்தான் அபாயகரமான அணியாக விளங்கியது . நைரோபியில் நடந்த இரண்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேரடியாக கால் இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது பாகிஸ்தான். அங்கே இலங்கையைச் சந்தித்தது.

இலங்கை அணி, பாகிஸ்தானைவிட பயங்கர வலிமையையோடு இருந்தது. ஜெயசூர்யா தலைமையிலான இலங்கை அணியில் சங்கக்காரா, ஜெயவர்த்தனே, அர்னால்டு, அட்டப்பட்டு, வாஸ், முரளிதரன் என நட்சத்திர வீரர்கள் நிறைந்திருந்தார்கள். கால் இறுதியில் இலங்கை முதலில் பேட்டிங் செய்தது. 8.3 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்து பெரிய ஸ்கோரை நோக்கிய ஓடிய இலங்கையை, வாசிம் அக்ரம் கட்டுக்குள் கொண்டுவந்தார். வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை. ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது மொயின் கான் அணி. அந்த மேட்ச்சில் அபாரமான ஒரு சதம் அடித்தார் அன்வர்.

அரை இறுதியில் நியூசிலாந்தைச் சந்தித்தது பாகிஸ்தான். அந்தப் போட்டியிலும் சயீத் அன்வர் சதம் அடித்தார். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற 253 ரன்களைத் துரத்தியது நியூசிலாந்து. அந்த அணிக்கு எந்த இடைஞ்சலும் கொடுக்கவில்லை பாக். பெளலர்கள். 49 ஓவர்களில் இலக்கை கடந்து, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பாகிஸ்தானை சொந்த ஊருக்கு விமானம் ஏற்றியது நியூசிலாந்து.

பாகிஸ்தான்

2002 ஆம் ஆண்டு, லீக் சுற்று:

இலங்கை, நெதர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. இலங்கை மண்ணில் நடந்த தொடரில் முதல் போட்டியே பாகிஸ்தான் Vs இலங்கை. சயீத் அன்வர் அரைசதம் எடுத்தார். மிஸ்பா, 47 ரன்கள் குவித்தார். அதைத் தவிர பாக். பேட்டிங் குறித்துச் சொல்ல ஒன்றும் இல்லை. முரளிதரன் மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். 201 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை, 36 ஓவர்களில் மேட்சை முடித்தது. ஜெயசூர்யா சதம் அடித்தார் .

இலங்கையிடம் தோற்ற கோபத்தை, நெதர்லாந்திடம் காண்பித்தது பாகிஸ்தான். ஷோயப் அக்தர், சமி இருவரும் நெதர்லாந்து பேட்ஸ்மேன்களை பெளன்ஸரில் பயமுறுத்தினார்கள். அஃப்ரிடி மூன்று விக்கெட்டுகளை எடுத்தார். 137 ரன்களைத் துரத்திய பாக்.,16.2 ஓவரில் சேஸிங்கை முடித்தது. ஷாஹித் அஃப்ரிடி 18 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள், நான்கு பெளண்டரிகள் என 52 ரன்கள் குவித்தார். அவரது ருத்ரதாண்டவத்தில் நடுங்கியது நெதர்லாந்து அணி. இந்தப் போட்டியில் பாக். வென்றிருந்தாலும், குரூப்பில் முதல் இடம் பிடிக்க முடியவில்லை என்ற காரணத்தால் டோர்னமென்ட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் இது. கென்யா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. முதல் போட்டியில் கென்யாவை ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தது பாகிஸ்தான். அஃப்ரிடி ஆறு ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டும் கொடுத்து, ஐந்து விக்கெட்டுகளை அள்ளினார்.

இரண்டாவது போட்டி, இந்தியாவுக்கு எதிராக எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்தது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் சச்சினின் அதிரடியில் பாகிஸ்தான் தோற்றது. அந்தக் காயத்தின் வடு அப்படியே இருந்தது. அதற்கு இந்தப் போட்டியில் பழிதீர்த்தது பாகிஸ்தான். சோயப் அக்தர் மற்றும் நவேத் உல் ஹசன் பந்துவீச்சில் தடுமாறினர் இந்திய பேட்ஸ்மேன்கள். இருவரும் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 201 ரன்கள் என்ற இலக்கை 49.2 ஓவரில் கடந்து, அரை இறுதியில் நுழைந்தது இன்ஸமாம் அணி.

சவுதாம்டனில் நடந்த அரை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸிடம் சரணடைந்தது பாகிஸ்தான். வெறும் 132 ரன்கள் என்ற இலக்கை 29 ஓவரில் கடந்தது வெஸ்ட் இண்டீஸ். இரண்டாவது முறையாக அரை இறுதியோடு வெளியேறியது பாகிஸ்தான்.

2006 ஆம் ஆண்டு லீக் சுற்று:

“இந்திய மண்ணில் கோப்பையை ஜெயிப்பது எங்கள் கனவு. இந்திய மண்ணில் நாங்கள் நிச்சயம் சாம்பியன் ஆவோம். கடந்த முறைபோல தவறு நடக்காது. இது பாகிஸ்தானுக்கான கோப்பை” என சோயப் அக்தர் தொடர் ஆரம்பிக்கும்போது சொன்னார். முந்தைய தொடர்களைக் காட்டிலும் இந்த முறை லீக் சுற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அணிகள், நான்கு பிரிவுகளுக்குப் பதிலாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றில் மூன்று அணிகளுடன் மோத வேண்டும். அதில் இரண்டில் வென்றால் அரை இறுதி வாய்ப்பு கிடைக்கலாம் என்ற விதியோடு தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி தொடர்.

பாகிஸ்தான் இடம்பெற்ற ‘பி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றன. முதல் போட்டியில் இலங்கையை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான். நியூசிலாந்துடனான போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி. மூன்றாவது போட்டியில் ஜெயித்தே ஆகவேண்டும் என்ற நெருக்கடி பாகிஸ்தானுக்கு.

தென் ஆப்பிரிக்காவுடனான அந்தப் போட்டியில், முதலில் பந்து வீசியது பாகிஸ்தான். 42 ரன்களுக்குள் ஐந்து பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார் பாக். பெளலர்கள். ஸ்மித், டிப்பின்னர், காலிஸ், கிப்ஸ், டிவில்லியர்ஸ் எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு கெம்ப்பும் பெளச்சரும் பொறுப்பாக ஆடினார்கள். 50 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்தது தென் ஆப்பிரிக்கா.

`சிறிய இலக்குதானே ஜெயித்துவிடலாம்’ என நினைத்துக் களமிறங்கியது பாகிஸ்தான். மொஹாலியில் நடந்த அந்தப் போட்டியில் ஆக்ரோஷமான கேப்டன்சியை வெளிப்படுத்தினார் கேப்டன் ஸ்மித். பாகிஸ்தானின் முதல் ஏழு பேட்ஸ்மேன்கள், ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகினர். 14.4 ஓவர்கள் முடிவில் 47 ரன்களுக்கு எட்டு விக்கெட்டை இழந்திருந்தது பாகிஸ்தான். பெளலர் யாசிர் அராபத் மட்டும் 27 ரன்களைக் குவித்தார். அவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் அணிக்கு அதிக ரன்கள் வந்தது உதிரிகள் (16) வாயிலாகத்தான். 25 ஓவர்கள் முடிவில் 89 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி, மிக மோசமான தோல்வியுடன் இந்தியாவைவிட்டுக் கிளம்பியது யூனிஸ்கான் அணி.

2009 ஆம் ஆண்டு, மீண்டும் அரை இறுதி:

வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. வெஸ்ட் இண்டீஸை 133 ரன்களுக்குச் சுருட்டி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பாகிஸ்தான்.

இந்தியாவுடனான போட்டியில் பரபரப்பு எகிறியது. செஞ்சூரியனில் நடந்த அந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 302 ரன்களைக் குவித்தது. முதல்முறையாக சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் 300 ரன்களைக் கடந்தது பாகிஸ்தான். அதற்குக் காரணம், சோயிப் மாலிக்கின் அபாரமான சதம். டெண்டுல்கர், கோலி, தோனியின் சொதப்பல் ஆட்டங்களால் 44.5 ஓவரில் 228 ரன்களுக்குச் சுருண்டது இந்தியா. இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவைத் தோற்கடித்த மகிழ்ச்சியில் அந்த நாடே கொண்டாட்டம் பூண்டது. ஆஸ்திரேலியாவுடனான கடைசி லீக் போட்டியில் 206 ரன்கள் இலக்குவைத்தது பாகிஸ்தான். கடைசி ஓவரின் கடைசிப் பந்தில் அந்த மேட்ச்சை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.

மூன்று லீக் போட்டிகளில், இரண்டு வெற்றியுடன் அரை இறுதியில் நுழைந்தது. ‘இந்தமுறையாவது இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வேண்டும்’ என்ற வெறியோடு நியூசிலாந்தை எதிர்கொண்டது. ஆனால், 233 ரன்களில் நியூசிலாந்திடம் அடங்கியது. 48-வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது நியூசிலாந்து அணி. மூன்றாவது முறையாக அரை இறுதியோடு வெறுங்கை வீசிக்கொண்டு தன் நாட்டுக்குத் திரும்பிச் சென்றது பாகிஸ்தான் அணி.

2013 ஆம் ஆண்டு, மரண அடி :

பாகிஸ்தான் மறக்க விரும்பும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் இதுவாகத்தான் இருக்கும். ஏனெனில், லீக் சுற்றில் மூன்று போட்டிகளிலும் தோல்வி! வெஸ்ட் இண்டீஸுடனான முதல் போட்டியில் 190 ரன்களில் ஆல் அவுட் ஆனது. மிஸ்பா மட்டும் 96 ரன்களுடன் நாட் அவுட்டாக நின்றார். 41-வது ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ். இரண்டாவது போட்டியில் இந்தியாவைச் சந்தித்தது. எட்ஜ்பாஸ்டனில் நடந்த அந்தப் போட்டியில் எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் படுதோல்வி அடைந்தது. வலுவான தென் ஆப்பிரிக்காவை 234 ரன்களில் கட்டுப்படுத்தியது. ஆனால், சேஸிங்கில் 167 ரன்களில் ஆல் அவுட்.

2017ல் சாம்பியன் ஆகுமா?

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல விஷயங்கள் புலப்படும். இதுவரை சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக எந்த அணியும் பெரிய அளவில் ரன்களை அடிக்கவில்லை. எந்த அணியும் பாகிஸ்தான் பெளலிங்குக்கு எதிராக 300 ரன்களைக் குவித்ததில்லை. பாகிஸ்தான் பங்குபெறும் ஆட்டங்கள் பெரும்பாலும் குறைந்த ஸ்கோர்கொண்ட போட்டிகளாகவே அமைந்துவருகின்றன.

இந்த சீஸனில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் இடம்பெற்றதே பெரிய விஷயம். தட்டுத்தடுமாறித்தான் உள்ளே நுழைந்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்தை இரண்டு போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவை ஒரு போட்டியிலும் வென்றதைத் தவிர, ஒருநாள் போட்டிகளில் பெரிதாக ஈர்க்கவில்லை பாக். அணி.

பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் ஐந்து பேட்ஸ்மேன்கள், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள், நான்கு ஆல்ரவுண்டர்கள், ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன், ஒரு ஸ்பின்னர் என்ற கலவையுடன் அணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. பாக். அணியில் வேகப்பந்து வீச்சு நல்ல பலத்துடன் இருக்கிறது. ஆனால், பேட்டிங்தான் படு சுமார். நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாகத் தவறுகின்றனர். யாசிர் ஷா மாதிரியான அபாயகரமான ஸ்பின்னர்கள் அணியில் இல்லை.

விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சர்பராஸ் அகமதுதான் இந்த முறை கேப்டன். அவர் இன்னமும் தன்னை பெரிய தொடர்களில் நிரூபிக்கவில்லை. அந்த அணியில் ஒரே ஆறுதல் பாபர் அசாம்தான். சமீப காலங்களில் நல்ல ஃபார்மில் ஆடிவருகிறார். திறமையான பேட்ஸ்மேனும்கூட. அசார் அலியும் சிறப்பாகவே ஆடக்கூடியவர். சேஷாத்தின் ஃபார்ம்தான் கவலையளிக்கும் அம்சமாக இருக்கிறது. பாகிஸ்தானின் பெரும் பலம் ஆல்ரவுண்டர்கள். ஹபீஸ், இமாத் வாசிம், சோயிப் மாலிக் ஆகியோர் சிறப்பாக ஆடினால், பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கும்.

இங்கிலாந்து ஆடுகளங்கள் இந்த முறை சராசரியாக 275 ரன்களுக்குமேல் குவிக்கக்கூடிய பேட்டிங் பிட்சாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் வேகப்பந்துக்கும் சாதகமாக இருக்கும். எனவே, வெறும் பந்துவீச்சை மட்டும் நம்பி களமிறங்கினால் ஜெயிப்பது கடினம். பாக். அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஃபீல்டிங். பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமான களத்தில் ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டால் இந்த முறையும் சாம்பியன் கனவைப் புதைக்கவேண்டியதுதான்.

எதிர்பார்க்கப்படும் லெவன்:

ஷேஷாத், அசார் அலி, பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், சர்ஃபராஸ் அகமது, இமாத் வாசிம், ஹசன் அலி, வஹாப் ரியாஸ், முகமது ஆமீர், ஜுனைத்கான்

பாகிஸ்தான்

இந்த சீஸனில் இலங்கை, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் பாகிஸ்தானும் உள்ளது. இலங்கை அணியும் பாகிஸ்தானும் கிட்டத்தட்ட சம அளவிலான வலிமையோடுதான் இருக்கின்றன. கொஞ்சம் முயற்சித்தால் இலங்கையை வென்றுவிட முடியும். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் கணிப்பது கடினம். ஏற்கெனவே இரண்டு முறை இந்திய அணியை வீழ்த்தியிருப்பதால், மனவலிமையோடு இந்தியாவை எதிர்கொள்ளும் பாகிஸ்தான். வலுவான தென் ஆப்பிரிக்காவை ஏற்கெனவே 2015ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் வீழ்த்தியது பாகிஸ்தான். அதன் பிறகு, இரண்டு அணிகளும் இப்போதுதான் மோதவுள்ளன. தென் ஆப்பிரிக்கா இந்த முறை அசுர வலிமையுடன் களமிறங்குகிறது. அந்த அணியை வீழ்த்த, பாகிஸ்தான் ரொம்பவே சிரமப்படவேண்டியிருக்கும்.