2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆடுவது கன்பார்ம்




சூதாட்ட புகார் காரணமாக #சென்னை #சூப்பர்கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு #ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டிருந்தது.

இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை.

மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்த ஆண்டு முதல் களமிறங்க உள்ள தகவலை அந்த அணிக்கான டிவிட்டர் பக்கம் நேற்று இரவு அதிகாரப் பூர்வமாக மீண்டும் அறிவித்துள்ளது.

மும்பை மற்றும் புனே அணிகள் நடுவேயான நேற்றைய பைனல் போட்டி நிறைவடைந்த பிறகு, இந்த டிவிட்டை சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்கு பெரிய விசிலு அடிங்க என்ற கோஷம் இந்த அணிக்கானது.

அணியின் கேப்டனாக ஆரம்பம் முதலே டோணிதான் செயல்பட்டு வந்தார். அவர் புனே அணிக்காக ஆடிய விதம் சில விமர்சனங்களை ஈட்டித் தந்த போதிலும், சென்னை அணிக்காக அவர் ஆடிய அத்தனை சீசனிலும் டோணியின் ஆட்டமும், கேப்டன்ஷிப்பும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டோணிதான் மீண்டும் சி.எஸ்.கே அணி கேப்டனாக செயல்படுவார் என இந்தியா சிமெண்ட்ஸ் உரிமையாளர் சீனிவாசன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.