சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? இந்த முறை தென் ஆப்ரிக்காதான்

614




Champions trophy-2017 PREVIEW: SOUTH AFRICA

இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒருநாள் போட்டி அது. வழக்கமாக வெற்றி தோல்விகளில் பெரிய ஆர்ப்பாட்டம் காட்டாத தென் ஆப்ரிக்க அணி அன்றைய தினம் நடந்த போட்டியில் தோற்றதற்கு மைதானத்திலேயே கண்ணீர் சிந்தியது. அணித்தலைவர் ஏபி டிவில்லியர்ஸ் விழியோரம் கண்ணீர் கசிந்ததையும் அதைக் கட்டுப்படுத்தியதையும் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களுக்குள் சோகம் புகுந்தது. அந்த மேட்சில் நியூசிலாந்து வென்றது. ஆனால் கிரிக்கெட் ரசிகர்கள் அத்தனை பேரும் ஆறுதலாக நின்றது தென் ஆப்ரிக்கா அணிக்குத்தான். அந்த மேட்ச் கடந்த உலகக்கோப்பையில் நடந்த அரையிறுதிப் போட்டி !

தென் ஆப்ரிக்காவுக்கும் நாக் அவுட் சுற்றுக்கும் எப்போதும் டிஷ்யூம் டிஷ்யூம்தான். ஒரு முறை ஒரு ரன்னில் தோல்வியைத் தழுவும்; இன்னொரு முறை மழை தென் ஆப்ரிக்க ரசிகர்களின் கனவை தவிடுபொடியாக்கும்; மற்றொரு முறை டக் வொர்த் லூயிஸ் பெருந்தடையாய் வந்து நிற்கும். பாகிஸ்தான் இந்தியாவை உலகக்கோப்பையில் வெற்றி கொள்ளும் என காத்திருந்த பாக் ரசிகர்களை விட தென் ஆப்ரிக்க ரசிகர்கள் ரொம்பவே பாவம். ஆனால் எப்போதும் அவர்களது அணியை அந்த மக்கள் விட்டுக்கொடுப்பது இல்லை. டிவியை போட்டு உடைப்பதில்லை, வீரர்கள் வீட்டில் கல் எறிவதில்லை. உலகக்கோப்பையை ஜெயிப்பது, ஓர் அணியின் தொடர் வெற்றிகளுக்கு ஒரு மகுடம். தென் ஆப்ரிக்காவிடம் அந்த மகுடம் இல்லைதான். ஆனாலும், இப்போதைய சூழ்நிலையில் தலை சிறந்த அணிகளில் முக்கியமானது தெ.ஆ.

ஏ பி டிவில்லியர்ஸ்

கடந்த 25 ஆண்டுகளில் தென் ஆப்ரிக்க அணி அளவுக்கு தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். எந்த உலகக்கோப்பை வந்தாலும் சரி தென் ஆப்ரிக்காவுக்கு கோப்பையை ஜெயிப்பதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கும். ஆனால் கோப்பைதான் பெரும்பாலும் கைகூடுவது இல்லை. அதிர்ஷ்டம் இல்லை; அதனால் கோப்பையை அடையமுடியவில்லை என தட்டிக்கழிக்க முடியாது. ஏனெனில், பல சமயங்களில் தென் ஆப்ரிக்க அணியினர் நம்பவே முடியாத வகையில் அதீத பதற்றத்தால் தவறு செய்திருக்கிறார்கள். தலைசிறந்த வீரர்களே சில சமயங்களில் அணிக்கு வில்லனாவார்கள்.

இப்போதும் ஏபி டிவில்லியர்ஸ் முதல் டி காக் வரை நாக் அவுட் என்றால் பதற்றம் கொள்கிறார்கள். சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் கூட வெற்றியின் விளிம்புவரை வந்தபிறகும் பதற்றத்தால் தவறான ஷாட் ஆடி இரண்டு ரன்களில் தோற்றது தெ.ஆ.

இப்போதும் தென் ஆப்ரிக்காதான் ஐசிசி தர வரிசைப் பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. மிக வலுவான அணி என பெயரெடுத்திருக்கிறது. இதெல்லாம் மட்டுமே சாம்பியன் ஆக போதுமானதா… சாம்பியன்ஸ் டிராபியில் தென் ஆப்ரிக்கா கடந்து வந்த பாதை என்ன… இந்த முறை சாம்பியன் பட்டம் வெல்லும் வாய்ப்பு எப்படி?

முதல் சாம்பியன் : –

தென் ஆப்ரிக்கா இதுவரை ஜெயித்த ஒரே ஐசிசி கோப்பை 1998 ஆம் ஆண்டு நடந்த நாக் அவுட் டிராபி கோப்பை தான். குரோனியே தலைமையில் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா கோப்பையை தூக்கியது. முதல் நாக் அவுட் டிராபி தொடரில் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெற்றிருந்தது தெ.ஆ. அங்கே இங்கிலாந்தைச் சந்தித்தது. 282 ரன்கள் எனும் கடினமான இலக்கை நேர்த்தியாக ஆடி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அரையிறுதியில் இலங்கையை டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதியது. லாரா அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் வாலஸ் ஒரு முனையில் நிதானமாக ஆடி சதமடித்தார். மறுமுனையில் விக்கெட்டுகளை விறுவிறுவென வீழ்த்தினார் காலிஸ். ஐந்து விக்கெட்டுகளை அன்றைய தினம் தனது பாக்கெட்டில் போட்டுக்கொண்டார் அவர். “1975ல் நடந்த முதல் உலகக்கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ். முதல் மினி உலகக் கோப்பையும் நாம் தான் வெல்லப் போகிறோம். 20 ரன்கள் குறைவாக எடுத்திருக்கிறோம். எனினும் நம்மால் வெற்றி பெற முடியும். இடையில் சில ஆண்டுகள் கிரிக்கெட் உலகில் சரிவைச் சந்தித்தோம். நாம் நம் பெருமையை மீட்டெடுக்க வேண்டும். மீண்டும் கிரிக்கெட் உலகை ஆள வேண்டும். இந்தப் போட்டியை வெல்வதே அந்த இலக்கை அடைய நாம் எடுத்து வைக்கும் முதல் அடி” என வீரர்கள் மத்தியில் உரையாற்றினார் கேப்டன் லாரா. இன்னொரு பக்கம் குரோனியே தென் ஆப்ரிக்க வீரர்களை உற்சாக மூட்டினார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு ஓரளவு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. அதன்பிறகு, வெ.இ பந்து வீச்சாளர்கள் மேட்சை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 137/5 என தடுமாறியது தெ.ஆ. அப்போது களத்தில் இருந்தது இளம் வீரர் பென்கென்ஸ்டீயினும், கேப்டன் ஹன்ஸ் குரோனியவும்தான். ஒரு கேப்டன் தனது அணியை எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு உதாரணமான ஆட்டத்தை ஆடினார் குரோனியே. 77 பந்துகளில் அவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 61 ரன்கள் குவிக்க, நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தென் ஆப்ரிக்கா. முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் நாடே கோலாகலம் பூண்டது. உலகப் புகழ் பெற்றார் குரோனியே.

தென் ஆப்ரிக்கா சாம்பியன்

இந்தியாவிடம் தொடர் தோல்வி : –

கென்யாவில் நடந்த இரண்டாவது மினி உலகக் கோப்பையில் காலிறுதியில் இங்கிலாந்தை எளிதாக வீழ்த்தியது. அரையிறுதியில் இந்தியாவை சந்தித்தது தெ.ஆ. கங்குலி அதிரடியில் 295 ரன் குவித்தது இந்தியா. சேஸிங்கில் சத்தம் காட்டாமல் சரிந்தது பொல்லாக் அணி.

2002 உலகக்கோப்பை இலங்கை மண்ணில் நடந்தது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீசை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், கென்யாவை 176 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அரையிறுதியில் நுழைந்தது தென் ஆப்ரிக்கா. மீண்டும் அங்கே இந்தியா. சேஸிங்கில் 262 ரன்களைத் துரத்தியது. ஸ்மித் நான்கு ரன்னில் அவுட் ஆனாலும் கிப்ஸ் – காலிஸ் இணை அதிரடியாக ஆடியது. இந்தியாவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெற்றி வாய்ப்பே இல்லை. தென் ஆப்ரிக்காவின் ஸ்கோர் 192/1 என இருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார் கிப்ஸ். அதன் பிறகு நடந்தது நம்பவே முடியாத மேஜிக். காலிஸ் 97 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 251 ரன்கள் மட்டுமே குவித்தது. ஒருநாள் போட்டிகளில் இன்றளவும் சிறந்த ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இரண்டாவது முறையாக இந்தியாவிடம் தோற்று அரையிறுதியோடு வெளியேறியது தென் ஆப்ரிக்கா.

2004 : லீக் சுற்றோடு மூட்டையை கட்டிய கதை : –

இந்த மினி உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் ஒரு பிரிவில் இடம்பெற்றிருந்தன. வங்கதேசத்தை 93 ரன்களில் சுருட்டி எறிந்து ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீசை சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்தது தெ.ஆ. ஸ்மித் – கிப்ஸ் அணி அதிரடி ஆட்டம் காட்டியது . 20 ஓவரில் ஸ்கோர் 100 ரன்களை தொட்டது. அப்போது கெயிலை பந்து வீச அழைத்தார் லாரா. உடனே பலன் கிடைத்தது கெயில் பந்துவீச்சில் போல்டானார் ஸ்மித். கிப்ஸ் சதமடித்த கையோடு கெயிலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். ரூடால்ஃபையும் அன்றைய தினம் பெவிலியன் அனுப்பியது கெயில்தான். 280 ரன்களை தொடவேண்டிய மேட்சில் 246 ரன்களோடு திருப்திப்பட்டது தெ.ஆ.

ஸ்மித்தின் பாச்சா லாராவிடம் பலிக்கவில்லை. சர்வான், லாரா, சந்திரபால் இணையின் பொறுப்பான ஆட்டத்தால் 49-வது ஓவரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது வெ.இ. லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியது தென் ஆப்ரிக்கா.

2006 : மீண்டும் அரையிறுதி

இந்தமுறை நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் ஒரே பிரிவில் இருந்தன. முந்தைய தொடர்களை விட வலிமையான அணியாக காணப்பட்டது தென் ஆப்ரிக்கா. இந்திய மண்ணில் நடந்த தொடரை நிச்சயம் தென் ஆப்ரிக்காவே கைப்பற்றும் என அடித்துச் சொன்னார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள். முதல் போட்டியில் நியூசிலாந்தை 195 ரன்களில் அடக்கியது. ஆனால் தென் ஆப்ரிக்காவும் 108 ரன்களில் அடங்கியது. இதனால் அடுத்த இரண்டு போட்டிகளை ஜெயித்தே ஆக வேண்டிய கட்டாயம்.

வாஸ் – மலிங்கா இணையின் பொறிபறந்த வேகப்பந்தில் 30/3 என அல்லாடியது தெ.ஆ. காலிஸ் மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார்கள். நிதானமாக ஆடி ரன்களைச் சேர்த்தார்கள். டிவில்லியர்ஸ் அரை சதம் அடித்தார். அவர் அவுட் ஆனதும் ரன் ரேட் ஒடுங்கியது. 219 ரன்களை மட்டுமே சேர்த்து தெ.ஆ. ஆனால் நெல், நிதினி, பொல்லாக் கூட்டணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சில் இலங்கை 141 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

மொஹாலியில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சில் 42/5 என சரிந்தது. ஆனால் ரன்ரேட்டை ரிப்பேர் செய்து, கெம்ப்பும் பவுச்சரும் கவுரமான ஸ்கோர் குவிக்க உதவினார்கள். பாக்குக்கு இலக்கு 214 ரன்கள். மகாயா நிதினி பந்துவீச்சில் சிதைந்தது பாக்கின் பேட்டிங் ஆர்டர். 47/8 என நிலை குலைந்தது. 124 ரன்கள் வித்தியாச மெகா வெற்றியுடன் அரையிறுதியில் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா. அங்கே வெஸ்ட் இண்டீஸ் வந்தது.

கிறிஸ் கெயில் கொம்பனாக அவதாரம் எடுத்தார். ஒடுங்கியது தென் ஆப்ரிக்கா. கடந்த சாம்பியன்ஸ் டிராபியில் பவுலிங்கில் குடைச்சல் கொடுத்த கெயில் இம்முறை பேட்டிங்கில் வெளுத்தார். 44 ஓவர்களில் 258 ரன்களை சேஸிங் செய்து இறுதியில் காலடி எடுத்து வைத்தது வெ.இ. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணியால் வெளியேறியது தெ.ஆ.

2009 : மறக்க வேண்டிய தொடர்

இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இடம்பெற்ற பிரிவில் இருந்தது தென் ஆப்ரிக்கா. இதில் நியூசிலாந்தை மட்டுமே வெல்ல முடிந்ததால் அரை இறுதிக்குத் தகுதி பெறவில்லை.

2013 – மீண்டும் நாக் அவுட்டில் மண்ணை கவ்வியது

இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம்பெற்ற பிரிவில் தென் ஆப்ரிக்கா இடம் பிடித்தது. தொடரின் முதல் போட்டியில் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின. முதலில் பேட்டிங் பிடித்த இந்தியா 331 ரன்களை குவித்தது. தவான் சதமடித்தார். சேஸிங்கில் டிவில்லியர்ஸும், மெக்லாரனும் 70 ரன்களை அடித்தனர். எனினும் இலக்கை அடைய முடியவில்லை.

பாகிஸ்தானுடனான போட்டியில் மெக்லாரனின் அபாரமான பந்துவீச்சால் பாகிஸ்தானை வென்றது. வெஸ்ட் இண்டீசுடனான போட்டியில் மழை குறுக்கிட 31 ஓவர்கள் கொண்ட போட்டியாக மாற்றப்பட்டது. 230 ரன்கள் இலக்கு வைத்தது தெ.ஆ. 26 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்திருந்தது வெ.இ. 27-வது ஓவரை மெக்லாரன் வீச வந்தார். முதல் பந்தில் பொல்லார்டு அவுட். மீண்டும் மழையால் ஆட்டம் தடைபட்டது. மேட்ச் நடைபெறவே வாய்ப்பில்லை என தெரிந்த பிறகு டக் வொர்த் லூயிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. அப்போது 26.1 ஓவர்களில் 190 ரன்கள் என்பதுதான் இலக்கு. வெஸ்ட் இண்டீஸ் சரியாக 190 ரன்கள் எடுத்திருக்க போட்டி டை என அறிவிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் இரண்டு அணிகளும் ஒரு வெற்றி ஒரு டை என புள்ளிகளின் அடிப்படையில் சமநிலையில் இருந்தாலும் ரன்ரேட் அடிப்படையில் வெஸ்ட் இண்டீஸ் அரையிறுதியில் நுழைந்தது. அரையிறுதியில் இங்கிலாந்துடன் ஆடியது. 76/7 என சரிந்த தென் ஆப்ரிக்காவின் ஸ்கோரை மில்லர் ஓரளவு சரி செய்தார். எனினும் 175 ரன்கள் என்பது வெற்றி பெற போதுமான ஸ்கோராக இல்லை. இங்கிலாந்து சிரமமே இல்லாமல் வென்றது. நொந்து கொண்டே ஊருக்கு திரும்பியது டிவில்லியர்ஸ் அணி.

இம்முறை என்ன நடக்கும்?

தென் ஆப்ரிக்கா இடம்பெற்றிருக்கும் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட அணிகள் உள்ளன. இந்தியாவைத் தவிர மற்ற அணிகளும் சுமாரான ஃபார்மிலேயே உள்ளன. எனவே ஜாக்கிரதையோடு நேர்த்தியாக ஆடினால் அரையிறுதி வரை செல்வதில் சிரமம் இருக்காது. இந்த சீசனில் அசுர வலிமையோடு இருக்கிறது தென் ஆப்ரிக்கா. ஆடும் 11 பேரில் பாதிக்கும் மேலானவர்கள் மேட்ச் வின்னர்கள். இந்த சீசனில் மிகச்சிறந்த படை தென் ஆப்ரிக்காவிடம் தான் இருக்கிறது. பல வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

2015 உலகக்கோப்பைக்கு பிறகு அதிக வெற்றி சதவீதத்தை வைத்திருக்கும் அணிகளில் முக்கியமானது தென் ஆப்ரிக்கா. கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஒருநாள் தொடர்களில் ஆடியிருக்கிறது . இதில் ஏழு முறை கோப்பையை வென்றது தென் ஆப்ரிக்கா. பலம் வாய்ந்த இந்தியாவை இந்திய மண்ணில் வீழ்த்தி தொடரை வென்றது குறிப்பிடத்தக்க அம்சம். வங்கதேச மண்ணில் ஒரு தொடரை இழந்தது. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முத்தரப்பு தொடரில் கோப்பையை இழந்தது. அதற்குப் பிறகு சமீப நாள்களில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என இழந்திருக்கிறது தெ.ஆ.

தென் ஆப்ரிக்கா

கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 25 போட்டிகளில் வென்றுள்ளது. வெற்றி சதவீதம் 62.5%.

40 ஒருநாள் போட்டிகளில் 20 முறை முதலில் பேட்டிங் செய்திருக்கிறது. 20 முறை சேஸிங் செய்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த 20 போட்டிகளில் 14 முறை வென்றுள்ளது. சேஸிங் செய்தபோது 11 போட்டிகளில் வென்றுள்ளது.

தென் ஆப்ரிக்கா

முதலில் பேட்டிங் செய்யும்போது வெற்றி சதவீதம் 70% . சேஸிங்கில் வெற்றி சதவீதம் 55 %. இந்த புள்ளிவிவரங்களே தென் ஆப்ரிக்காவின் பலம், பலவீனத்தைச் சொல்லி விடுகின்றன. தென் ஆப்ரிக்கா டாஸ் வென்று முதலில் பேட்டிங் பிடித்தால் மிகவும் அபாயகரமான அணி. 20 போட்டிகளில் 10 முறை 300 ரன்களுக்கும் மேலாக குவித்திருக்கிறது. முதலில் பேட்டிங் செய்யும்போது தென் ஆப்ரிக்காவின் சராசரி 288 ரன்கள். இந்த இரண்டு ஆண்டுகளில் குறைந்தபட்சமாக 162 ரன்களையும், அதிகபட்சமாக 438 ரன்களையும் எடுத்திருக்கிறது தென் ஆப்ரிக்கா.

இம்முறை நான்கு பேட்ஸ்மேன்ககள், ஐந்து வேகப்பந்து வீச்சாளர்கள், இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள், மூன்று ஆல்ரவுன்டர்கள். ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற கலவையில் 15 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்திருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் லெவன் : –

ஹாஷிம் ஆம்லா, குயின்டன் டீ காக், ஃபாப் டு பிளசிஸ், ஏபி டி வில்லியர்ஸ், டுமினி, மில்லர், மோரிஸ், ககிசோ ரபடா, ஆண்டிலே ஃபெலுக்வாயோ, இம்ரான் தாஹீர், மோர்னே மோர்கல்

South Africa

பிளஸ் – மைனஸ் :-

ஆம்லா அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். ஐபிஎல்லில் வெளுத்துக் கட்டிய கையோடு சமீபத்தில் அரை சதமும் அடித்திருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக ஆடக்கூடிய வெகு சில அயல்நாட்டு வீரர்களில் ஆம்லாவும் ஒருவர். மெதுவாக வரும் பந்துகளை கையாளுவதில் தேர்ந்தவர். அவர் 25 – 30 ஓவர்கள் வரை களத்தில் இருப்பது அவசியம்.

டீகாக் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஒருநாள் போட்டிகளில் சத்தமில்லாமல் ஜாம்பவான்களின் சாதனையை உடைத்து வருகிறார். சுழற்பந்தை பயப்படாமல் பெரிய ஷாட் ஆடக் கூடிய வீரர். பேட்டிங் பிட்ச்களில் இவர் நின்றால் ரன் ரேட் ஏழுக்கு கீழ் குறையாது.

ஃபாப் டு பிளசிஸ் பொறுப்பான பேட்ஸ்மேன். அவர் இன்னமும் இங்கிலாந்து மண்ணில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. தென் ஆப்ரிக்கா அடுத்ததாக இங்கிலாந்து மண்ணில் தான் டெஸ்ட் தொடர் ஆடவிருக்கிறது. ஆகவே இப்போதே பார்முக்கு வரவேண்டியது டெஸ்ட் கேப்டனுக்கு அவசியம். சுழற்பந்தை நன்றாக கையாளக் கூடியவர். லீக் சுற்றில் இவர் மேட்ச் வின்னராக திகழ வாய்ப்பு அதிகம்.

ஏபி டிவில்லியர்ஸ் அபாயகரமான வீரர். நம்பர் 1 பேட்ஸ்மேன். ஆனால் சமீப காலங்களாக பெரிய ஸ்கோர்கள் அடிக்க முடியாமல் தடுமாறுகிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு நீண்ட இன்னிங்ஸ் ஆடுவதில் சற்றே தள்ளாட்டம் தெரிகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 18 போட்டிகளில் பேட்டிங் பிடித்தும் ஒரு முறை சதம் அடிக்க வில்லை. அதே சமயம் 2013 – 2015 காலகட்டத்தில் இவர் 10 சதங்களை அடித்திருந்தார். சமீப காலங்களாக இவரது ஸ்ட்ரைக்ரேட்டும் சற்றே குறைய ஆரம்பித்திருக்கிறது. இங்கிலாந்து மண்ணில் 15 இன்னிங்ஸ்களில் இவர் ஒரு முறை கூட சதமடிக்க வில்லை. மூன்று முறை அரை சதம் எடுத்திருக்கிறார். இங்கிலாந்தில் ஒருநாள் போட்டி சராசரி 37.46 மட்டுமே. இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட மண்ணில் எல்லாம் வியக்கத்தக்க சராசரி வைத்திருக்கும் டி வில்லியர்ஸ் இங்கிலாந்து மண்ணில் அடக்கிவாசிக்கிறார்.

ஏ பி டியிடம் சுட்டிக்காட்ட ஒரே ஒரு குறை என்றால் அது இங்கிலாந்து மண்ணில் அவர் இன்னமும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்பதே. பொதுவாக வேகப்பந்துகளையும் சரி, மெதுவாக வரும் பந்துகளையும் சரி அபாரமாக கையாளும் திறன் பெற்றவர் ஏபிடி. ஆனால், நன்றாக ஸ்விங் ஆகும் பந்துகளில் அவசரப்பட்டு ஷாட் ஆட முயன்று அவுட்டாகிவிடுகிறார். ஆமீர், புவனேஷ்வர் குமார் என லீக்கிலேயே சவாலான பவுலர்கள் காத்திருக்கிறார்கள். அதே சமயம், டிவில்லியர்ஸ் ஒரு சாம்பியன் பிளேயர். நவீன கிரிக்கெட்டில் புது புது யுக்திகளை கையாளுபவர். ஈரப்பதம் இல்லாத பிட்ச் எனில் இவரிடம் மாட்டும் பவுலர்கள் சின்னாபின்னமாவார்கள். பழைய பன்னீர்செல்வமாக மட்டுமல்ல, இந்த முறை கோப்பையையும் முத்தமிட வேண்டும் என ஆவலுடன் இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் டிவில்லியர்ஸ். இம்முறை இங்கிலாந்து மண்ணில் வரலாற்றை மாற்றி எழுதுவார் என நம்பலாம்.

தென் ஆப்ரிக்கா அணி

டுமினி கடைசியாக சதம் அடித்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. இதே காலகட்டத்தில் நான்கு அரை சதம் மட்டுமே அடித்திருக்கிறார் . இங்கிலாந்து மண்ணில் 13 இன்னிங்ஸ்களில் இவரது சராசரி வெறும் 17.91 மட்டுமே. அணிக்கு வலு சேர்க்கும் பார்ட் டைம் சுழற்பந்து வீச்சாளர் என்பதன் அடிப்படையிலேயே அணியில் இவரை வைத்திருக்கிறார்கள். டுமினியிடம் நிறைய மைனஸ் இருந்தாலும் மேட்ச் வின்னிங் பிளேயர் என்பது பெரிய பிளஸ். நல்ல ஃபினிஷரும் கூட. எனினும் தொடர்ந்து சொதப்பல் ஆட்டம் ஆடினால் பெஹார்டீன் இவரது இடத்தை பிடிக்கக்கூடும்.

மில்லர் வேகப்பந்து மைதானங்கள் என்றால் கில்லர் பேட்ஸ்மேன். இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாகவே ஆடியிருக்கிறார். இந்த தொடரில் இவரது பங்களிப்பு முக்கியமானது. கிறிஸ் மோரிஸ்தான் தென் ஆப்பிரிக்காவுக்கு துருப்புச் சீட்டு. ஏழாம் நிலையில் களமிறங்கி இவர் வெளுத்ததுக் கட்டினால் தெ.ஆ நிம்மதியுறும். மோரிஸ் பந்துகள் பெரிதாக ஸ்விங் ஆகாது என்பதால் இங்கிலாந்து மண்ணில் இவர் சுமார் பவுலர். வெய்ன் பார்னெல் இங்கிலாந்து மண்ணில் நன்றாக வீசக்கூடியவர். ஆல்ரவுண்டர் எனும் அடிப்படையில் இவரை பிளெயிங் லெவனில் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதற்கு உரிய நியாயம் செய்ய வேண்டும். மோரிஸ் பேட்டிங்கில் வேகப்பந்தை நன்றாக கையாளக்கூடியவர் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார் ஏபிடி.

ரபாடா … இந்த இளம் வீரரிடம் இருக்கும் எனெர்ஜி ப்ப்பா. ஸ்விங், லெங்த், பவுன்சர், யார்க்கர், ஸ்லோ பால் என எல்லா அஸ்திரங்களையும் சரியாக பயன்படுத்தத் தெரிந்தவர். மோர்னே மோர்கல், கிறிஸ் மோரிஸ், பார்னெல் என சீனியர் வீரர்கள் அணியில் இருந்தாலும் இப்போதைய தென் ஆப்ரிக்க அணியில் டாப் பவுலர் இவர் தான். இந்த இளம் வயதிலேயே ஓய்வின்றி, எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் சமாளிக்கிறார். இவர் முழு பார்மில் ஆடினால் இவர் தான் மேட்ச் வின்னர்.

ஃபெலுக்வாயோ கீழ் வரிசையில் பேட்டிங் செய்யக்கூடிய நல்ல ஆல்ரவுண்டர். இவருக்கு இன்னமும் பெரிய அளவில் வாய்ப்புகள் கைகூடவில்லை. இந்த சீசனில் இவர் சாதிக்க வேண்டும். டுவைன் ப்ரீடோரியஸ் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சர்யமான விஷயம். அதிகளவில் ரன்களை விட்டுத்தரமாட்டார். சிக்கனமான பவுலர் என்பது பிளஸ். இவர் நல்ல ஆல்ரவுண்டரும் கூட. மோரிஸை நீக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் இவர் அணியில் இடம்பெறுவார்.

மோர்னே மோர்கல் சமீப காலங்களில் பெரிதாக சாதிக்க வில்லை. எனினும் இவரது அனுபவம் அணிக்குத் தேவை. இம்ரான் தாகீர் மேட்ச் வின்னிங் பவுலர். எப்பேர்ப்பட்ட பேட்ஸ்மேனையும் அவுட் ஆக்கும் திறன் படைத்தவர். நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவர் விக்கெட்டுகளை வீழ்த்த ஆரம்பித்தால் தென் ஆப்ரிக்கா எளிதில் வெற்றிக்கோட்டைத் தொடும்.

Comments
Loading...