இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்- Kholi
சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில், அரையிறுதிப் போட்டிகள் நடக்க உள்ளன. நாளை நடக்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதையடுத்து, நாளை மறு நாள் நடக்கும் போட்டியில், இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா-பிரிட்டன் கலாசார ஆண்டைக் குறிக்கும் விதத்தில் நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அதில், இந்திய அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே மற்றும் கேப்டன் கோலி, தோனி உள்ளிட்ட வீரர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய கோலி, “அரையிறுதியில் எந்த அணிகள் விளையாடுகின்றன என்பது முக்கியமில்லை. லீக் சுற்றுகள்தான் கடினமானவை. இறுதிச்சுற்றுக்கு முன்னேற இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் போதும். இறுதிப் போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோத வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இரு நாடுகளும் சிறப்பாக விளையாடினால், அது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும்.
நாங்கள் எந்த மைதானத்தில் விளையாடினாலும், ரசிகர்கள் திரளாக வந்து ஆதரவளிக்கின்றனர். அது மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக, இங்கு மேகங்கள் சூழ்ந்திருக்கும்போது கிரிக்கெட் விளையாடுவது சவாலானது. ஆனால், வெயில் நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு இதைவிட நல்ல சூழல் வேறு எதுவுமில்லை” என்றார்.
இதனிடையே, “இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்பட்சத்தில், எந்த அணியுடன் விளையாட விரும்புகிறீர்கள்” என்று செய்தியாளர்கள் கோலியிடம் கேட்டதற்கு, “எந்த அணியாக இருந்தாலும் சரி, நாங்கள் இறுதிப் போட்டியில் பங்கு பெறுவதே மகிழ்ச்சிதான்” என்றார்.