IPL 2017: விசேட விருதுகள்
ஐபிஎல் 2017ம் ஆண்டு போட்டிகளில் விருது பெற்றவர்களின் சாதனை தருணங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைவிட்டு என்றும் அகலாதவை.
ஐபிஎல் 2017ம் ஆண்டு போட்டிகளில் விருது பெற்றவர்களின் சாதனை தருணங்கள் கிரிக்கெட் ரசிகர்களின் மனதைவிட்டு என்றும் அகலாதவை.
ஐபிஎல் 2017 சாம்பியன் பட்டம் – மும்பை இண்டியன்ஸ்: ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி, இதன்மூலமாக, ரூ. 15 கோடி பரிசுத் தொகை மற்றும் கோப்பையும் வென்றுள்ளது. இந்த அணியின் வீரர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இது மும்பை இண்டியன்ஸ் அணிக்கு, 3வது முறையாகக் கிடைத்துள்ள ஐபிஎல் பட்டம் ஆகும்.
ஆறுதல் பரிசு
அதேசமயம், புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, இந்த முறை எப்படியேனும் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தது, அதன் வீரர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனினும், முதல்முறையாக, புனே அணி, ஐபிஎல் சீசன் போட்டிகளில், இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்தபோதிலும், புனே அணிக்கு, ரூ.10 கோடி ஆறுதல் பரிசும், ஆறுதல் கோப்பையும் வழங்கப்பட்டது. அந்த அணியின் அனைத்து வீரர்கள், நிர்வாகிகளுக்கு, நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆரஞ்ச் தொப்பி வென்ற டேவிட் வார்னர்
இந்த தொடரில், அதிக ரன் குவித்தவருக்கான விருதை டேவிட் வார்னர் தட்டிச் சென்றார். அவருக்கு, ஐபிஎல் சீசன் போட்டிகளில் ஆரஞ்ச் தொப்பி அணிந்து விளையாடும் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. 14 போட்டிகளில், 641 ரன்களை அவர் குவித்துள்ளார். இது மட்டுமின்றி, வார்னருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. ஆனால், விருது வழங்கும் விழாவில் அவர் பங்கேற்கவில்லை. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் அவர் என்பதும் கூடுதல் தகவல்.
பழுப்பு நிற தொப்பி வென்ற புவனேஸ்வர் குமார்
அதிக விக்கெட்கள் வீழ்த்தியதற்காக, பழுப்பு நிற தொப்பி அந்தஸ்து, புவனேஸ்வர் குமாருக்கு வழங்கப்பட்டது. அவர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பாக, இந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடி, 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இது மட்டுமின்றி, ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும், நினைவுக் கோப்பையும் புவனேஸ்வர் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
யெஸ் பேங்க் மேக்சிமம் சீசன் விருது
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கிளென் மாக்ஸ்வெல், ஐபிஎல் 2017 தொடரில், மிக அதிக உயரம் கொண்ட 26 சிக்சர்களை அடித்ததற்காக, யெஸ் பேங்க் மேக்சிமம் சீசன் விருதை தட்டிச் சென்றுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு, நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது.
வோடஃபோன் சூப்பர்பாஸ்ட் அரை சதம் விருது
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பாகப் பங்கேற்ற சுனில் நரேன், பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில், 15 பந்துகளில் அதிவேக அரைசதம் அடித்தார். இதன்மூலமாக, வோடஃபோன் சூப்பர்பாஸ்ட் அரை சதம் விருதை தட்டிச் சென்றார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் நினைவு கோப்பை வழங்கப்பட்டது.
விதரா பிரெஸ்ஸா கிளாம் ஷாட் விருது
யுவராஜ் சிங், இந்த விருதை தட்டிச் சென்றார். அவர் அடித்த நேர்த்தியான பேட்டிங் ஷாட்களை பாராட்டி, பிரெஸ்ஸா கார் மற்றும் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு, நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது. எனினும், விருது வழங்கும் விழாவில் யுவராஜ் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக, முகமது சிராஜ் இதனை பெற்றுக் கொண்டார்.
ஐபிஎல் சீசன் தொடரின் ஸ்டைலான ஆட்டத்திற்கான விருது
கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் இந்த விருதை தட்டிச் சென்றார். அவருக்கு, ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் நினைவுக் கோப்பை வழங்கப்பட்டது. காம்பீர் விருது நிகழ்ச்சிக்கு வராத காரணத்தால், நிதிஷ் ரானா அவருக்குப் பதிலாக, இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
ஃபேர் ப்ளே விருது
குஜராத் லயன்ஸ் அணி, இந்த ஃபேர் ப்ளே விருதை தட்டிச் சென்றுள்ளது. மொத்தம் 14 போட்டிகளில் விளையாடிய இந்த அணி, 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எனினும், இந்த ஐபிஎல் சீசனில், குஜராத் அணி வீரர்கள் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.
வளரும் வீரருக்கான விருது
புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி சார்பாக விளையாடிய பேசில் டாம்பிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. கடந்த 1991ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்து, சிறப்பாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவோருக்கு இந்த வளரும் வீரர் விருது வழங்கப்படுவது வழக்கம். இதன்படி, பேசில் 12 போட்டிகளில் விளையாடி, 11 விக்கெட்களை வீழ்த்தியிருந்ததால், அவர் விருதை வென்றுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.